Pages

Monday, 19 December 2011

சாதிநூல்-1 [சாதிநூல் ஆய்வடங்கல்]



                                இது தமிழ் அச்சுப்பண்பாடு சாதிநூல்கள் (1800-1950) என்ற இவ்வாய்வேட்டிற்கு மூலநூல்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட தேர்ந்தெடுத்த அய்ம்பது சாதிநூல்களின் மிகச்சுருக்கமான ஆய்வடங்கலாகும். இதில் ஆண்டுவாரியாக நூல்கள் வரிசையிடப்பட்டுள்ளன. இதில் குறிக்கப்பட்ட எண்கள் மேற்கோளின் அடைப்புக்குறிக்குள் இடப்பட்ட எண்களுடன் (1,2,3.......) ஒத்துள்ளன.ஒருவகையில் மூலநூல்களின் துணைநூற்பட்டியலாகவும் இவற்றைக் கொள்ளமுடியும். இதன் முடிவில் சாதிநூல்களின் முகப்புப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.இது சாதிநூல்களின் புரிதலை இன்னும் விரிவுபடுத்துமென நம்புகிறேன்.


1. 1872 - ஜாதி சங்கிரகசாரம்:
                                இந்நூல் மயிலைக்கடுத்த குண்ணம் முனிசாமிப்பிள்ளையால் இயற்றப்பட்டது. ம. சிவபாதநாயகர், நயப்பாக்கம் வீராசாமிநாயகர், லா. செங்கல்வராய நாயகர், க. ஆண்டியப்பராயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசலநாயகர் முதலிய வன்னிய தனவான்கள் கேட்டுக்கொண்டபடி எழுதப்பட்டதாக நூல்முகப்பில் உள்ளது - மேலும் இந்நூல் காஞ்சிபுரம் முத்துகச்சீஸ்வரகுருக்கள், கு.சின்னசாமி சாஸ்திரி, நாகை                      - வைத்தயநாத சாஸ்திரி, நெல்லூர் நாராயாணையர்,ம. செங்கல்வராயப் பிள்ளை, போ.சுதரிசனதாஸர் இவர்களன்றி இன்னும் பலர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு கவிரஞ்சனி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டு தமிழ் ஆங்கீரச வருடம் ஆனிமாதம் 1872ஆம் வருடம் சூன் மாதம் வெளியிட்டப் பட்டது - 1871இல் எடுக்கப்பட்ட குடித்தொகை மதிப்பில் பலசாதிகளின் விவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மேற்படி குடிமதிப்பைச் செய்த மிஸ்டர் கோவர் துரை அவர்களுக்கு முறையான வழக்கமான சாதிவரிசையைக் காட்ட இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்குடிமதிப்பு நூலைச்செய்யும் போது
’’இந்தத்தமிழ் நாட்டுக்குரிய புராணநூல்களைக் கொண்டும், பூர்வீக வழக்க வொழுக்கத்தை விசாரித்தும், பொறாமை கக்ஷிபேதமில்லாமல் நடு நிலைமையையுடைய வித்வான்களைக் கொண்டும், மேற்படி நூலைச் செய்யாமல் வாசித்தல் – தேசத்துப் பூர்வீகவழக்க வொழுக்கமொன்றுந் தெரியாத வடக்கத்திய வடுகர் வாய்மொழியைக்கொண்டு’’ (1872:2)
1872
செய்யப்பட்டதால் இதில் பல குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடுகிறது.இத்தோடு பள்ளிஎன்கிற சாதியாரை (வன்னியர்) சூத்திர வருணத்தில்உள்ள ஒன்பதாவது  பிரிவில் சேர்த்திருப்பதைக் கண்டடித்து அவர்கள்அரசபரம்பரையினர் என்றும் பள்ளிஎன்பது அரசருக்குரிய பட்டம் எனவும்விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதத் தூண்டியவர்கள் வன்னிய தனவான்கள் என்பதிலிருந்து. இது வன்னியரை க்ஷத்திரிய வருணத்தாராக அங்கரிக்க எழுதப்பட்டது என மறைமுகமாகத் தெரிந்துகொள்ளலாம் - இதில்பல ஜாதிகளின் உற்பத்தி விவரம் சொல்லப்பட்டுள்ளது - சமஸ்கிருத அமர நிகண்டில் சொல்லப்பட்ட சாதிகளின் பட்டியலும் - தமிழ் திவாகர, சூடாமணிநிகண்டுகளில் சொல்லப்பட்ட சாதிகளின் உற்பத்தி விவரமும் பட்டியலாகத்தரப்பட்டுள்ளன. இன்னும் பல சாதிகள் தம்முள் கூடி ஏற்படுத்திய சங்கர (கலப்பு சாதி) சாதிகளின் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியாககுடிமதிப்புச் சபையார் செய்த தீர்ப்பு அனியாயபுரிப் பட்டியணத்தில் வழங்கிய தீர்ப்பைப் போலவே இருவருக்கும் பயன்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுக்கும்போது அவர்கள் செய்ததப்பிதங்களை தனித் தலைப்பிட்டு விரிவாக விளக்கியிருக்கிறது. சாதிநூல்கள் தோன்றுவதற்கு குடிமதிப்புத் தொகை எடுக்கப்பட்டபோது பல சாதிகளின் விவரங்கள் இந்நாட்டு புராண இதிகாசங்களுக்கு மாறாகக் குறிப்பிடப்பட்டதே காரணமாகும். என்பதற்கு இந்நூலே சான்றாகும்.

1 comment: