Pages

Wednesday 15 February 2012

உதயசங்கர் கதைகள் -திறனாய்வு


உதயசங்கர் கதைகள்
தமிழ்ச்சிறுகதைகளில் வட்டார மொழிக்கதைகளுக்கென்று தனி இடமுண்டு.அதில் கரிசல் வட்டாரம் சார்ந்து எழுதும் உதயசங்கரின் ஒவ்வொரு கதையும் அதன் தோற்றப் பின்புலத்தைப் புலப்படுத்துகின்றன.அவர் எந்த வர்கத்துக்கானவர் என்பதும் அவரின் கதைகளின் மூலமே விளங்கும்.சாதாரண மக்களின் எளிய வாழ்பனுவங்களை கதையாக்கியதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ளமுடியும். எளிய வருணனையும் சொற்பிரையோகமுமே கதையின் கருவை வாசகனுக்கு எளிமைபடுத்தித் தருகின்றன.எண்பதுகளில் வெளிவந்த இவரின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. குறிப்பாக இடதுசாரி இதழான செம்மலரில் வந்தவை. தீபம், தேடல், தாமரை, விழிகள்,சுபமங்களா என்று அதன் பட்டியல்  நீண்டுகொண்டே செல்கிறது.ஒரு எழுத்தாளரின் ஒரே சமயத்தில் எழுதி தொகுப்பாக்கம் பெறும் பிரதிக்கும் பல்வேறு காலகட்டங்களில் எழுதியவற்றை தொகுப்பாகக் கொண்டிவரும் பிரதிக்கும்  நிறைய வேறுபாடுகள் உள்ளன. பல்வேறுகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகள் அதன் உள்ளடக்கம் மற்றும் புறச்சூழலின் தாக்கம் அதிகம் பெற்று முந்தயதைவிட கனமான படைப்பாக வெளிவரும் என்பதை மறுக்க முடியாது. இதிலும் கதைகள் பத்திரிகைகளுக்குத் தகுந்தாற்போல் அடக்கமான ஒன்றிரண்டு  பக்கங்களைக் கொண்டிருப்பதையும் தவிர்ப்பதற்கில்லை.அந்த வகையில் உதயசங்கரின் இருபதாண்டுகால உழைப்பு  பிறிதொறு மரணம் என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியீடக வந்துள்ளது.
உதயசங்கரின் கதைகளை படிக்கத்தூண்டுவது அவரின் கரிசல் வட்டார நடையே எனலாம்.விருவிருப்பு,சுவாரசியம் கலந்த வெகுசன  நடையில் இல்லாமல்,மனித உறவுகளின் துக்கம், அவலம், மனக்கசப்பு,சகிப்புத்தன்மை கொண்ட பாத்திரங்களை படைத்திருக்கிறார். நடுத்தரவர்க்க வாழ்க்கையை விவரிக்கும் இவரின் கதைகளில்  இடைஇடையே வரும் வருணனையும் வட்டாரச் சொற்களும் கதயை நகர்த்திச் செல்கின்றன.``` ’’’’”””””‘அமைதியான இரவு.சின்னச் சின்ன இரவுப் பூச்சிகளின் கீச்சொலி விடாது முழங்குகிறது.தாமிரபரணி சின்ன சிரிப்புடனும் அந்தரங்கமான குசுகுசுப்புடனும் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலே  நிலவின் வெள்ளையொளி நீரின் மீது பட்டுத் தெளித்தது.அந்த ஒளியைத் தின்ன  நீரின் மேற்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளி விழும் ‘சளப் சளப்‘ என்ற சத்தம் இடையிடையே ‘‘ இவரின் ஒவ்வொரு கதையிலும் இத்தன்மையான வருணனைகளைக் காணமுடியும்.
இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் வறுமை இழையோடுகிறது.வறுமைக்கான பின்புலம் எதையும் ஆராயாமல் அதனால் எற்படும் பிரச்சனைகளை மட்டுமே கதைகள் விளக்குவது அதற்குத் தீர்வாக அமையவில்லை. ஆனால்  இவரின் பிறிதொரு மரணம் கதையில் ரூபாய்  நோட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் ‘காந்தி‘-க்கு ஊழல் சமுதாயத்தால் பிறிதொரு மரணம்  நிகழ்கிறது. இது சமகால ஊழலொழிப்புப் பேர்வழிகளை நினைவுபடுத்துகிறது.பணம் என்கிற ஒற்றைக் காரணத்தினால் மனித மனங்களில் ஏற்படும் சஞ்சலம்,வெறுப்பு,பகைமை,அவமதிப்புக் குணங்கள், வாழ்க்கைக்கான மனப் போரட்டங்கள் என அனைத்தையும் அவரின் பாத்திரப்படைப்புகள் சித்தரிக்கின்றன. தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஈடுபடுத்தப்படும் குடும்பத்தின்  நிலையை ‘பொம்பளைப் பிள்ளைகள் ஆவுடையம்மாளும் மரகதமும் உயிரின்  நெருப்பைத் திரட்டி தீக்குச்சிகளில் சேர்க்க  தீப்பெட்டியாபீசுக்குப் போயிருந்தார்கள். தீக்குச்சிகளுக்கு நெருப்பின் சூட்சுமத்தைத் தந்ததுக்குப் பிரதிபலனாக மெழுகின் மக்குவாசமும் பழைய சோறும் சாய்பு கடை புரோட்டா சால்னாவும் கிடைத்தன...... ‘  என்று விவரிக்கிறார்.இடதுசாரி இதழ்களில் இவரின் கதைகள் வந்திருப்பினும் அவை அனைத்தும் வர்க்க முரணைப் பேசுவதாய்யில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெற்றோர்×பிள்ளைகள், கணவன்×மனைவி, சமூகம்×மனிதர் என்பதாக இவர் சமூக முரண்பாடுகளை முன்னிறுத்துகிறார். சமூகத்தில் இருக்கும் மற்ற முரண்களை இவர் கணக்கில் எடுத்துக்கொள்ளாததும் குறிப்பிட்த்தக்கது. குடும்பமே இவரின் கதைக்களமாக விரிகிறது.குடும்ப வன்முறை என்பதும் அதில் பெண்கள் ஒடுக்கப்படுதல் என்பதும் அடக்கம்.கணவன் மனைவிமீது வைக்கும் சந்தேகம் தொடங்கி அவள் மீது திணிக்கும் பாலியல் வன்முறை ஈராக அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். இதை தாயின் மீதான தந்தையின் வன்முறையாக மகனிடமிருந்தே தொடங்குகிறார். அவன் கண்களைத் திறந்தபோது கரிய பூதம் ஒன்று அம்மவின்மேல் படர்ந்திருந்தது.அம்மா மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள்.ஆனால்,அந்த பூதம் அம்மாவின் மேல் உட்கார்ந்து குடல் குந்தாணியெல்லாம் வெளியே இழுத்துப் போட்டது. அம்மா ஈனஸ்வரத்தில் முனகினாள். அது அந்தப் பூதத்துக்கு சந்தோஷமே போல மேலும் மேலும் விழுந்து நசுக்கியது‘‘
இத்தகைய கதைக்களங்களுடன் இவரின் தொழிலான இரயில்வே பணியானது இன்னொரு கதைக்களனாக அமைகிறது.அதில் அவர் பெற்ற அனுபவங்களும் படிப்பினைகளும் சம்பவங்களும் கதைகளாகப் புனையப்பட்டுள்ளன.ஆசிரியர் தான் வாசித்த ‘நள்ளிரவில் சுதந்திரம்‘ நூலின் அனுபவத்தை சமகால நிகழ்வாகப் புனைந்துள்ளார். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு‘ என்ற அந்த கதை கடந்தகால வரலாற்றில் இஸ்லாமியர்களுக்கு நிகழ்ந்த ஒடுக்குமுறைகளுக்கு  நிகழ்காலத்தில் [அந்த சம்பவங்களுக்கு] விடை தேடுவதாக இருக்கிறது. என்றோ நிகழ்ந்த சம்பவத்தை சமகால  நிகழ்வகக் கருதுவது படைப்பாளியின் மீதான  நம்பகத்தன்மையை எற்படுத்துகிறது. அது தொடர்பான அவரின் வெளிப்பாடு இப்படியாக அமைகிறது.  ‘ஒரு கருத்துக்காகவா  நம்பிக்கைகாகவா இத்தனைக் கொலைகள். நடைமுறையில் இல்லாத,செயல்படுத்த முடியாத கருதுகோள்களும் யூகங்களும் புனைவுகளும் கற்பனைகளும் மனிதர்களை இப்படி கொடிய ஒரு காட்டுமிராண்டிகளாக்கி விடுமா?’’ என்ற படைப்பாளியின் கேள்விகளை நம்மைப்பார்த்து நாமே விளிப்பதாகக் கருதிக்கொள்ள முடியும்.இதுவே படைப்புமனம். இத்தகைய மனமே படைப்பாளியின் படைப்பை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டுசெல்கிறது. அதில் உதயசங்கர் வெற்றிபெற்றுள்ளார்.
உதயசங்கரின் படைப்புகள் எளிமையும்  நோக்கமும் கொண்டிருப்பினும் அவரின் கதைகள் அனைத்தும் ஒரே ‘தொனி‘யில் எழுதப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஒருவித சளிப்பை ஏற்படுத்துவதை தவிற்கமுடியவில்லை.இது படைப்பாளியின் அடுத்தகட்ட  நகர்வை கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன.


தமிழ்நூல் விவர அட்டவணை - சாதிநூற்பட்டியல்


இதில் சாதிநூல் என்கிற பொருண்மையில் ஒரு குறிப்பிட்ட சாதி தொடர்பான நூல்கள், சாதிபற்றிய பொதுவான நூல்கள், குறிப்பிட்ட சாதி சார்ந்த சடங்குகள், மாநாடுகள், தீர்மானங்கள், தீர்ப்புகள், நடவடிக்கைகள், வரலாறுகள், ஆய்வுகள், கண்டனங்கள், அறிக்கைகள் என ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்காணும் நூல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான நூல்கள் 1961 முதல் 1978 வரையுள்ள காலங்களில் தமிழநாடு அரசினர் தமிழ் வளர்ச்சித்துறைகள் சார்சிபில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் விவர அட்டவணைத் (ஜிலீமீ னீணீபீக்ஷீணீs stணீtமீ ஜிணீனீவீறீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் - 1867-1935) தொகுதிகளிலிருந்தே எடுக்கப்பட்டவை. பின்வரும் ஆய்வாளர்களுக்குப் பயன்அளிக்கும் வகையில் இவை காலவரிசைப்படி தொகுத்துத் தரப்பட்டள்ளன. சாதி - சாதியம் தொர்பான அத்துணை செல்பாடுகளையும் ஒருங்கே ஆய்வதின் மூலமே சாதியும் அதன் வீரியமும் தமிழ் அச்சுப்பண்பாட்டில் நிகழ்த்தியிருக்கிற தாக்கத்தை நாம் மதிப்பிடமுடியும் என்ற வகையில் அச்சில் வெளிவந்த சாதிசம்பந்தமான நூலகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  1. 1869 - செங்குந்தர் பிள்ளைத்தமிழ், கோவிந்த பிள்ளை இயற்றியது, வர்த்தமான தரங்கிணீ சாகை அச்சுக்கூடம்   
  2. 1870 -    ஆரிய புராண வசனம்: நயினாத்தை முதலியார் இயற்றியது, கலாரத்நாகரம்அச்சுக்கூடம், சென்னை, (மொ-ப) 53.

1871 - சாதி (எண் - 12)(நீணீst ழிஷீ.12): இரண்டாம் பதிப்பு,கிரேவஸ் குக்சன் அண்டு கோ, ஸ்காட்டிஸ் அச்சுக்கூடம்,   சென்னை, (மொ-ப)40, விலை-3  பைசா.
1872-    ஜாதி சங்கிரக சாரம்: குண்ணம் முனிசாமி பிள்ளை இயற்றியது,       கவிரஞ்சனி அச்சுக்கூடம், சென்னை.
1874- வேளாளர் இயல்பு :கெ.வ நாகலிங்க சாஸ்திரி இயற்றி,                                                                                                                                                                                                                                                                                         திருஞான    சம்பந்த கவிராயர் பதிப்பித்தது, முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி.

1874 - வைசி புராணம்: சூடாமணிப் புலவர் பாடியதை, ம. கோவிந்த செட்டியார் பதிப்பித்தது, வைசியக் கல்வி விளக்க    சங்கத்தினரின் முயற்சியால் சென்னை கம்மெர்சியல் பிரஸில் அச்சிடப்பெற்றது. (மொ-ப) 1067, விலை - 2ரூ 8 அணா.

1874 - வாணிபர் கைவளம்: ம. கோவிந்த செட்டியார், கம்மர்ஷியல் பிரஸ், சென்னை.
1874 - வாணியராயிரவர்பேரில் பாடிய அம்மானை: மா. கோவிந்த செட்டியார், கம்மர்சியல் பிரஸ், சென்னை.
1874 - சான்றோர் குல மரபு காத்தல் :ச. வின்பிரிட்டு அய்யர் இயற்றியது,
பாஸ்ட்டர் அண்டு கோ அச்சுக்கூடம், சென்னைப்பட்டணம்,       (மொ-ப) 458.
1874 - வைசிய கல்வி விளக்க சங்க விஜயம் :மா. கோவிந்த செட்டியார், மாதவ நிவாச அச்சுக்கூடம், (மொ-ப) 66.
1874 - வைசிய புராணம்: சி. ராஜகோபால் பிள்ளை, முதற்பதிப்பு; சீ.ஜீ. ரத்தின முதலியார் & கோ; கம்மர்சியல் பிரஸ்,விலை-2ரூ,8 அணா.
1875 - பருவதராஜ புராணச் சுருக்கம்: மூலமும் உரையும்: முதல் பதிப்பு;
                  புதுவை, பு.சி. சின்னதம்பி நாட்டார் இயற்றியது, அருணாசல முதலியார் பதிப்பித்தது, மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை.

சாதிநூல்-8


8. 1887 - சூத்திரர் சீர்திருத்தம்:
இஃது கவித்தலம், கல்விச்சாலைப்போதகாசிரியரும் சூத்திரசீர்திருத்த சபைக் காரியதாரிசியும் ஆகிய மகா மகா ஸ்ரீ வி. தியாகராஜ பிள்ளையவர்களால் செய்யப்பட்டு சென்னை மிமோரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. ஸர்வஜித்து வருடம் மாசி மாதம் - இந்நூல் இனாமாக வழங்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சூத்திரர்களுடைய ஆடை ஆபரணம், ஆசாரம் என்னும் இவைகளை சாஸ்திரப்படி திருத்தி நாகரிகம் செய்ய வேண்டியதற்காக ‘சூத்திர சீர்திருத்தசபையொன்று ஏற்பட்டு அதற்கு மெம்பர்களாக சூத்திரர்களை நாகரீகப்படுத்த விரும்புகிற எந்தச் சாதியாரும் சேரலாம் என்று அறிவித்திலிருந்து அச்சபையின் நோக்கம் என்பது மற்ற சாதியாரைப்போல் (குறிப்பாக பார்ப்பனர்) நாகரிகமுடைய ஆடை, அணிகலன்களை அணியவேண்டுமென்பதேயாகும். சூத்திரருள் மராட்டியர், கோமுட்டி, முதலி, இராசவார், வடுகர், செட்டி, வெள்ளாளர், சாலியம் எனப்பல சாதிகள் இருப்பதாகக் குறிப்பிடும் இந்நூல் சூத்திர சாதியுள் சேர்ந்த சிலர் தன்னை க்ஷத்திரியர், வைசியர், சைவாள் என்று கூறிக்கொள்வதை மறுக்கிறது. அதேசமயம் மாமிசம் உண்ணும் சூத்திரசாதியினர் தாழ்ந்தவர்கள் என்றும் மாமிசம் உண்ணாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் தரம்பிரிக்கிறது. ஆனால் சூத்திரப் பெண்டுகளில் பெரும்பான்மையோர் நாகரிக மற்றும் தொள்ளைக்காதுடையவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர்களை திருத்த புத்திமான்கள் அவர்களை நாகரிகமுடையவர்களாக ஆக்கவேண்டுமென்றும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்-துளையுடைய காதுகளில் கோவைக்காய், சுண்டைக்காய் பாவக்காய் போன்ற அவலக்ஷண நகைகளை மாட்டிக்கொண்டும் மானம் இரண்டும் (முலைகள்) தெரியும்படி உடையுடுத்திக்கொண்டும் சூத்திரப் பெண்டுகள் இருப்பதைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்கிறது-பிரித்தானியர் வருகையால் கல்வி, வேலைவாய்ப்பு இவைகளைப் பெற்ற சூத்திர சாதியினர் காலம் மாறுவதற்கு ஏற்ப பழைய மரபான ஆடை அணிகலன்களைத் துறந்து புதிய நாகரிக வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் சூத்திரப் பெண்டுகளை மற்ற ஜாதிபெண்டுகள் ஏளனம் செய்வதிலிருந்தும் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுள் ஒன்று இந்நூல் - பொருளியல், தொழில், கல்வி இவைகளில் ஏற்படும் மாற்றம் சமூகத்திலும் ஏற்படும் என்பதனை இதனைக்கொண்டே விளங்கிக்கொள்ளலாம் - சீர்திருத்தம் செய்வதிலும் ‘மேல்சாதியைப் போல் தன்னை மாற்றிக்கொள்வது’ என்கிற மேல்நிலையாக்க மனித மதிப்பீடே காரணமாக அமைவதைக் கவனிக்கமுடியும்-இன்று கிடைப்பதற்குரிய இந்நூல் உன்னதம் மாத இதழில் பிப்ரவரி 2009இல் ஆணவனப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதிநூல்-7


7. 1883 - பாண்டியகுல விளக்கம்:
இந்நூலை இயற்றியவர் அ.க. பொன்னுசாமி நாடார் - இதை ஆ.பி. பாலசுப்பிரமணிய நாட்டார் பார்வையிட்டு - கோ. ரத்தினவேல் நாடன் உத்திரவின்படி-சூ.வெங்கடாஜலமுதலியாரின் குமாரர் சூ. முனிசாமி முதலியாரது மாதவநிவாசவச்சுக்கூடத்திற் 1883இல் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டுரிஜிஸ்டர் செய்யப்பட்டது-இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1899ஆம் வருடம் மேற்படியாராலேயே வெளிவந்தது-விலை புஸ்தகம் ஒன்றுக்கு 4 அணாக்கள்-சில நாடார் தலைவான்கள் தங்கள் குலவிபரத்தை அறியவும் அதே சமயம் ஆங்கிலேய துரைத்தனத்தார்கள் தமிழ்நாட்டு மன்னர் மரபினர் இன்னார் என்று அறியவும் இந்நூல் செய்யப்பட்டதாக அதன் பாயிரம் கூறுகின்றது. இது பாண்டிய மன்னர்களின் வம்சாவழியைக் கூறி அந்த  வழியே வந்தவர்களாக நாடார்சாதி மக்களைக் குறிப்பிடுகிறது-பாண்டியகுல க்ஷத்திரியர்களான நாடார்களின் நிலை வடுக அரசர்களான நாயக்கமன்னர்கள் மற்றும் கிருஷ்ணதேவராயர் முதலியோரால் தாழ்நிலைக்குத்தள்ளப்பட்டது என்றும் அவர்களின் இன்றைய தாழ்ச்சிக்கு அவர்களே காரணம் என்று விளக்குகிறது-நாடார் என்பது தமிழ் அரசரான பாண்டியர்களுக்குச் சிறப்புப்பட்டமாக விளங்குவதைக்குறித்து நாடார்கள் பாண்டிய வம்சத்தினர் என சான்றளிக்கிறது-ஒவ்வொரு சமூகத்தினரும் தன்னை ஏதோ ஒரு மன்னர் வழியினர் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றதைப் பார்க்கிறோம்-மேலும் பாண்டியரான நாடார்களின் இத்தகைய நிலை ஆங்கிலேய துரைத்தனர்தாரின் வருகையால் களைந்ததாகவும் கல்வியறிவு இவர்களாளேயே தமக்கு அளிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய அரசினைப்புகழ்ந்து பாடுகிறது இந்நூல். 

Wednesday 8 February 2012

தமிழர் பறை: கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங...

தமிழர் பறை: கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங...: கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங்கக்கூட்டம் இடம் : லயோலா கல்லூரி நாள் : 4-2-2012 நிகழ்ச்சி ஏற்பாடு: அணு உலைக்கு எதிரான ...