8. 1887 - சூத்திரர் சீர்திருத்தம்:
இஃது கவித்தலம், கல்விச்சாலைப்போதகாசிரியரும் சூத்திரசீர்திருத்த சபைக் காரியதாரிசியும் ஆகிய மகா மகா ஸ்ரீ வி. தியாகராஜ பிள்ளையவர்களால் செய்யப்பட்டு சென்னை மிமோரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. ஸர்வஜித்து வருடம் மாசி மாதம் - இந்நூல் இனாமாக வழங்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சூத்திரர்களுடைய ஆடை ஆபரணம், ஆசாரம் என்னும் இவைகளை சாஸ்திரப்படி திருத்தி நாகரிகம் செய்ய வேண்டியதற்காக ‘சூத்திர சீர்திருத்தசபையொன்று ஏற்பட்டு அதற்கு மெம்பர்களாக சூத்திரர்களை நாகரீகப்படுத்த விரும்புகிற எந்தச் சாதியாரும் சேரலாம் என்று அறிவித்திலிருந்து அச்சபையின் நோக்கம் என்பது மற்ற சாதியாரைப்போல் (குறிப்பாக பார்ப்பனர்) நாகரிகமுடைய ஆடை, அணிகலன்களை அணியவேண்டுமென்பதேயாகும். சூத்திரருள் மராட்டியர், கோமுட்டி, முதலி, இராசவார், வடுகர், செட்டி, வெள்ளாளர், சாலியம் எனப்பல சாதிகள் இருப்பதாகக் குறிப்பிடும் இந்நூல் சூத்திர சாதியுள் சேர்ந்த சிலர் தன்னை க்ஷத்திரியர், வைசியர், சைவாள் என்று கூறிக்கொள்வதை மறுக்கிறது. அதேசமயம் மாமிசம் உண்ணும் சூத்திரசாதியினர் தாழ்ந்தவர்கள் என்றும் மாமிசம் உண்ணாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் தரம்பிரிக்கிறது. ஆனால் சூத்திரப் பெண்டுகளில் பெரும்பான்மையோர் நாகரிக மற்றும் தொள்ளைக்காதுடையவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர்களை திருத்த புத்திமான்கள் அவர்களை நாகரிகமுடையவர்களாக ஆக்கவேண்டுமென்றும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்-துளையுடைய காதுகளில் கோவைக்காய், சுண்டைக்காய் பாவக்காய் போன்ற அவலக்ஷண நகைகளை மாட்டிக்கொண்டும் மானம் இரண்டும் (முலைகள்) தெரியும்படி உடையுடுத்திக்கொண்டும் சூத்திரப் பெண்டுகள் இருப்பதைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்கிறது-பிரித்தானியர் வருகையால் கல்வி, வேலைவாய்ப்பு இவைகளைப் பெற்ற சூத்திர சாதியினர் காலம் மாறுவதற்கு ஏற்ப பழைய மரபான ஆடை அணிகலன்களைத் துறந்து புதிய நாகரிக வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் சூத்திரப் பெண்டுகளை மற்ற ஜாதிபெண்டுகள் ஏளனம் செய்வதிலிருந்தும் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுள் ஒன்று இந்நூல் - பொருளியல், தொழில், கல்வி இவைகளில் ஏற்படும் மாற்றம் சமூகத்திலும் ஏற்படும் என்பதனை இதனைக்கொண்டே விளங்கிக்கொள்ளலாம் - சீர்திருத்தம் செய்வதிலும் ‘மேல்சாதியைப் போல் தன்னை மாற்றிக்கொள்வது’ என்கிற மேல்நிலையாக்க மனித மதிப்பீடே காரணமாக அமைவதைக் கவனிக்கமுடியும்-இன்று கிடைப்பதற்குரிய இந்நூல் உன்னதம் மாத இதழில் பிப்ரவரி 2009இல் ஆணவனப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment