6. 1883 - சாண் க்ஷத்திரிய பிரசண்டமாருதம்:
இந்நூல் சி. செந்தில்நாதையரால் எழுதப்பட்டது - மேலும் இது திருநெல்வேலிச் சாணாரைக் குறித்து கால்டுவெல் எழுதிய ‘‘The Tinnevelly shanars’ என்ற நூலுக்கு மறுப்பாக சற்குணர் என்பவரால் கால்டுவெல்லைக் கண்டித்து ‘கால்டுவெல்லும் திருநெல்வேலிச் சாணாரும்’(Bishop Coldwell and the Tinnevelly shanars) என்ற நூலுக்கு மறுப்பாக இலங்கையினின்று கால்டுவெல்லிற்கு ஆதரவாகவே இது எழுதப்பட்டதே. இந்நூல் தற்போது கிடைக்காத பட்சத்தில் இனவரைவியல் நாடார் சாதி குறித்த நூல்கள் என்ற தலைப்பில் 2001இல் பா. மதுகேஸ்வரனால் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட பட்டயச் சான்றிதழுக்கான ஆய்வேட்டில் உள்ள மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டே இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கோள் தவிர மற்ற எதுவும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதில் கால்டுவெல்லின் சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன-இடையன்குடியில் தாழ்ந்த சாதியினராகக் கருதப்பட்ட சாணார்களை உயர்த்தி மெய்ஞ்ஞானபுரிச சாணான், மெய்ஞ்ஞான புர நாடான் என்பனவற்றை நீக்கி டோணாவூர்ப் பாதிரியார், மெய்ஞ்ஞானபுரப்பாதிரியார், இடையன்குடிப் பாதிரியார் என சிறப்பித்தவர் கால்டுவெல் என்றும் கூறப்பட்டுள்ளன-இந்நூலில் ஆசிரியர் சாணார் க்ஷத்திரியர் அல்லர் என்ற அபிமானமுடையவர் என்பதைப்
”புலிக்குப் பசுத்தோலிட்டு மூடிப் பசுக்கூட்டங்களுள்ளே ஓட்டியவாறுபோல சாணார் என்னும் சொல்லைச் சான்றார், சான்றவர், சான்றோர் என்றும் பெயர்களுக்குள்ளே புகட்டி மறையவர் பெயருக்கடுக்க மாட்டியிருக்கிறார்’(1882:17)”
என்று குறிப்பிடுவதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் சான்றோர் என்பது பழைய நூல்களில் ஜாதி நோக்காது கல்வி, அறிவொழுக்கம் இவைகளையே குறித்து நின்றதையும் குறிப்பிடுகிறார். செந்தில்நாதையர் சாணார் ‘க்ஷத்திரியர் அல்லர்’(Shanars Not Kshateriyas) என்ற நூல் எழுதியதாகவும் தெரியவருகிறது. பின்னாளில் சற்குணம் என்பார் 'செந்தில்நாதனுக்குச் செருப்படி' என்ற தலைப்பில் ஏசல் மொழியில் கண்டநூல் எழுதி சிறைசென்றதாகவும் தெரியவருகிறது. ஒரு குலத்தவர் குறித்த மாறுபட்ட கருத்துகள் வேறுவேறு குலத்தினரிடையே பகைமைப்பூசலை ஏற்படுத்தியதற்கு இத்தகைய சாதிநூல்கள் காரணமாக அமைந்திருந்ததை அறியமுடிகிறது.